திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷிதா (24). இவர் தமது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பொன்னேரி காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோதியதில் இளம் பெண் ஜோஷிதா தவறி கீழே விழுந்து தலை நசுங்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மணி என்பவரை கைது செய்தனர். இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகள் காரணமாக பல இடங்களில் சாலையோரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு சேரும் சகதியும் ஆகவும் மணல் திட்டுக்களாகவும் காணப்படுவதாகவும் இதனால் இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு