திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புத்தாண்டு விடுமுறையையொட்டி நேற்று முதல் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் ஏலகிரி மலையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வருகிறது. இந்தநிலையில் புத்தாண்டு தினத்தன்று எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தலைமையில் நேற்று மாலை 5 மணி அளவில் ஏலகிரி மலையில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையகரசி, ஏலகிரி மலை சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 40 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து விடுதிகளிலும் ஆவணங்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்களின் விவரங்கள்குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும், புத்தாண்டு அன்று மது விருந்து போன்ற செயலில் ஈடுபடும் விடுதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைபோலீஸ் சூப்பிரண்டு எசிசரிக்கை செய்தார்.