தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பஞ்சப்ப பள்ளியை சேர்ந்த சிறுவர்கள் 6 பேர் காவல் துறைக்கு அவதூறு ஏற்படும் வகையில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்துள்ளனர்.
அந்த வீடியோக்களில் பேசியுள்ள சிறுவர்கள் நாங்கள் கலவரம் செய்தால் தமிழகம் தாங்காது, எங்களை அடக்குவதற்க்கு காவல்துறை பத்தாது என வீர வசனம் பேசியுள்ளனர்.
மற்றொரு வீடியோவில் 2 சிறுவர்கள் அரிவாளை கையில் வைத்து கொண்டு நடனமாடியபடி நாங்கள் சொல்வது தான் இங்கு சட்டம் என பேசியுள்ளனர்.
மூன்றாவது வீடியோவில் நாங்க மனசு வைத்தால் நீங்க இருக்கவே மாட்டீங்க என்ற வசனங்களை பேசி வாட்ஸ் அப், முகநூல் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் இது குறித்து பஞ்சப் பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த வீடியோக்களை எடுத்து சமூக ஊடங்களில் பரவ விட்டது பஞ்சப்பள்ளியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதான சிறுவர்கள்தான் என கண்டறியப்பட்டது,
அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் 6 பேரையும் கைது செய்து சிறுவர் காப்பகத்தில் அடைத்தனர்.