திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் முத்துக்குமார் எனும் நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு (21.11.2025) அன்று காவல்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்பியுள்ளது. இத்தகவல் முற்றிலும் ஆதாரமற்றது. மேற்படி முத்துக்குமார் குடும்பத்தினருக்கும், மற்றொரு குடும்பத்தினருக்கும் இருந்த முன்பகை காரணமாக கடந்த (23.10.2025) அன்று, இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் வி.கே.புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலனாய்வு நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பினரும் நீதி மன்றத்தில் சரணடைந்து, நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகளில், எந்த நிலையிலும் காவல் நிலைய பிணையில், எந்த நபரையும் விடுவிக்கவில்லை. மேலும், முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்தது தொடர்பாக, அவரது மனைவி வி.கே. புரம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், காவல்துறைக்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டுகளையும் அவர் தெரிவிக்கவில்லை. எனவே இது போன்ற அமைப்புகள் உண்மை தகவல்களை கண்டறிந்து சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் பேணும் ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்














