தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணும் மையங்களில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 09.10.2021 அன்று 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 38 வாக்குச்சாவடிகளில் (Poling Stations) இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதவிர தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியனில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 42 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேற்படி நடந்து முடிந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (12.10.2021) நடைபெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்திலும், திருச்செந்தூருக்கு, திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்திலும், உடன்குடிக்கு, உடன்குடி யூனியன் அலுவலகத்திலும், ஸ்ரீவைகுண்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்திலும்,
கருங்குளத்திற்கு கருங்குளம் யூனியன் அலுவலகத்திலும், சாத்தான்குளத்திற்கு சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்திலும், ஓட்டபிடாரத்திற்கு ஓட்டபிடாரம் யூனியன் அலுவலகத்திலும், கயத்தாறுக்கு கயத்தாறு யூனியன் அலுவலகத்திலும்,
விளாத்திகுளத்திற்கு விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்திலும், புதூருக்கு புதூர் யூனியன் அலுவலகம் என மொத்தம் 10 இடங்களில் நடைபெற்று வருகிறது.
இது தவிர தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஒன்றியத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனேரி பகுதியில் உள்ள ஸ்ரீ உண்ணாமலை இன்ஜினியரிங் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 2 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 காவல் துணை காண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.