திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த சுப்பையா (47). (23.09.2025) அன்று இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி– சங்கரன்கோவில் சாலையில் செல்லும்போது, லாரன்ஸ்(52). என்பவர் ஓட்டி வந்த கார் மோதி காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்பையா சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து, மானூர் காவல் நிலையத்தில் முதலில் வாகன விபத்து வழக்கு என பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணையில், விபத்து நேரத்தில் காரை ஓட்டி வந்த லாரன்ஸ் குடிபோதையில் இருந்தது தெரிய வந்ததால் வழக்கை கொலையாகாத மரண குற்ற பிரிவாக மாற்றப்பட்டு லாரன்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், பிறர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நன்கு அறிந்தே, அப்படி செய்கிறார்கள். இதற்கு , அஜாக்கிரதை குற்றம் என்று மட்டும் சாதாரணமாக நடவடிக்கை எடுக்காமல், கொலையாகாத மரண குற்ற பிரிவில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அதே போல், குடிபோதையில் வாகனம் ஓட்டி பிறருக்கு காயம் ஏற்படுத்தும் சம்பவங்கள், கொலையாகாத மரண முயற்சி வழக்காக மாற்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிகழாண்டில் இதுவரை, குடிபோதையில் வாகனங்களை ஓட்டி இறப்பு ஏற்படுத்திய 8 வழக்குகள், கொலையாகாத மரண குற்றமாக மாற்றப்பட்டுள்ளன; இதற்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், 16 விபத்து காயம் சம்பவங்கள் கொலையாகாத மரண முயற்சி வழக்காக மாற்றப்பட்டுள்ளன. இதற்கான அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், பிறர் உயிரின் பாதுகாப்பிற்கும், மது போதையில் வாகனம் ஓட்டாமல் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்