திருவள்ளூர்: மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியாளர்கள் சாலையில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்தும் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீஞ்சூர் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்று தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வழுதிகைமேடு கிராமத்தை சேர்ந்த குட்டியம்மா 48 என்பவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் குட்டியம்மா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார் மற்றும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் சடலத்தை கைப்பற்ற வந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து சடலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் வெங்கடேசன் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியாளரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு