திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட தென்கலம்புதூரை சேர்ந்த கலையரசி (25), என்பவர், நாரணம்மாள்புரம் அருகே அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மேற்படி கலையரசியின் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து கலையரசி தாழையூத்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட தாழையூத்தை சேர்ந்த மணிகண்டன் (22), ராஜவல்லிபுரத்தை சேர்ந்த வலதி என்ற அஞ்சலி (22),குறிச்சிகுளத்தை சேர்ந்த முத்துசெல்வம் (24), மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த வலதி என்ற ஆறுமுகம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மூன்றாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் (22.11.2022)-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி திரு. விஜயராஜ்குமார், அவர்கள் மேற்படி குற்றவாளிகள் நான்கு பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்பளித்தார்.
மேற்படி வழிப்பறி வழக்கில் குற்றவாளியான வலதி என்ற ஆறுமுகம் என்பவர் சீவலப்பேரியில் நடந்த இரண்டு கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த தாழையூத்து காவல் நிலைய போலீசாரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.