நாமக்கல் : நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை தாங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தார். சேலம் மண்டல பாதுகாவலர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வன அலுவலர்கள் ராஜாங்கம் (நாமக்கல்) கஷ்யப் ஷஷாங் ரவி (சேலம்), சுதாகர் (ஆத்தூர்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது, தமிழ்நாட்டின் வனப்பகுதிகளை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு மரம் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தி வனப்பரப்பை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழக வனப்பகுதிகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தின் மொத்த புவி பரப்பில் 15 சதவீதம் வனப்பரப்பு பகுதியாகும். இதனை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதம் அதிகரிக்கும் பொருட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் அமைச்சர் கருத்தியல் விளக்க மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மரம் நடும் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலரும் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ஆர்.எம்.துரைசாமி மற்றும் வன சரகர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.