திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சடலத்தை மீட்ட காட்டூர் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 2000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். காட்டுப்பள்ளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பதட்டமான சூழல் நிலவியது. இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் மீது கற்களை கொண்டு எரிந்து தாக்குதலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டனர். அதன் உச்சகட்டமாக கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டது.கல் வீச்சு தாக்குதலில் காவல்துறையினர் 6 பேர் காயம் அடைந்தனர். இதன்பேரில் 78 வட மாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு