திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள செட்டியப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் குழுவினர் தணிக்கை செய்தனர். அப்போது அந்த கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் பணம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேலூர் வணிக குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் வங்கி செயலாளர் ரகுநாதன் (54) உள்பட சிலர், வங்கியில் நகை அடமானம் வைக்க வரும் நபர்களின் ஆவணங்களை கொண்டு, நகை அடமானம் வைத்ததாக கணக்கு காட்டி பணம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்த வழக்கு வேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 2 ல் மாஜிஸ்திரேட்டு திருமால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக இந்திராமிசையால் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, வங்கி செயலாளர் ரகுநாதனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.