மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுக நிலக்கரி முனையத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கும்மனூர் பகுதியில் பழுதாகி சாலையில் நின்றுகொண்டிருந்தது. அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு லாரியும் அந்த லாரிக்கு துணையாக நின்றுகொண்டிருந்தது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து சுண்ணாம்பு கட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு டாரஸ் லாரி சாலையோரம் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் ஓட்டுநரின் அறை நசுங்கி இடிபாடுகளில் ஓட்டுநர் சிக்கினார். இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செங்குன்றம் தீயணைப்பு வீரர்களை வரவழைத்தனர்.
செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நொறுங்கிய நிலையில் இருந்த லாரியின் இடிபாடுகளை அகற்றி லாரி ஓட்டுநரை சடலமாக மீட்டனர். விசாரணையில் மதுராந்தகம் சேர்ந்த லாரி ஓட்டுநர் பார்த்திபன் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு