திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் துறைமுகங்கள், நிலக்கரி முனையம், எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகள் கையாண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை ராயபுரத்தை சேர்ந்த அரசன் (42). என்ற அரசுப்பள்ளி தற்காலிக ஆசிரியர் இருசக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து காட்டுப்பள்ளி அரசு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார். காட்டுப்பள்ளியில் காமராஜர் துறைமுகம் அருகே இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த கண்டைனர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஆசிரியர் அரசன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் மோசமான சாலையில் அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கண்டைனர் லாரி ஓட்டுநர் நாராயணன் கைது செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு