தூத்துக்குடி : தூத்துக்குடி மதுரா கோட்ஸ் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணமுருகன் ஸ்ரீ வாரி டெக்னிக்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பொருள் விநியோகம் செய்து வந்துள்ளார். அதற்காக அனல்மின் நிலைய கனரா வங்கி கிளையில் நடப்பு கணக்கின் கீழ் (Current A/C.Name: SREE VAARI TECHNICS, A/CNO: 8501201001248, IFSC: CNRB0008501) Bill Discount Scheme என்ற லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். 14.09.2022 பகலில் 12.19 மணிக்கு மேற்படி சரவணமுருகன் என்பவரது வங்கி கணக்கிற்கு லோன் தொகை ரூபாய் 10 லட்சம் கிரெடிட் ஆகியுள்ளது. ஆனால் அன்றைய தினத்திலேயே மதியம் 02.53 மணிக்கு ரூபாய் 5,000/-, 02.55 மணிக்கு ரூபாய் 1/-, 02.56 மணிக்கு ரூபாய் 4,94,990/- என்று மொத்தம் ரூபாய் 4,99,991/- பணம் சரவணமுருகன் அனுமதியின்றி வங்கி கணக்கிலிருந்து டெபிட் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணமுருகன் மேற்படி கனரா வங்கி சென்று தனது பணம் ரூபாய் 4,99,991/- டெபிட் ஆனது தொடர்பாக விசாரித்தபோது Mobile Banking மூலமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வங்கியில் இருந்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் சரவணமுருகன் Mobile Banking, Internet Banking எதுவும் பயன்படுத்தவில்லை என்பதாலும், அவருக்கு தெரியமாலும் அவரின் அனுமதியின்றியும் மொத்தமாக ரூபாய் 4,99,991/-பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால், ஏமாற்றிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து இழந்த தனது பணத்தை மீட்டுத் தரும்படி National cybercrime Portal என்ற சைபர் கிரைம் இணைய தள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. லயோலா இக்னேஷியஸ் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன், மற்றும் போலீசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு, மேற்படி கனரா வங்கிக்கு விபரங்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதன் அடிப்படையில் வங்கியிலிருந்து நடவடிக்கை மேற்கொண்டு சரவணமுருகன் இழந்த பணம் அவருக்கு தெரியாமல் சென்றுள்ளதால் காப்பீடு மூலமாக இழந்த பணத்தை சரவணமுருகனின் கணக்கிற்கு வங்கியிலிருந்து திரும்ப வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடரந்து விசாரணை செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் மேற்படி சரவணமுருகனை (17.10.2022), நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணம் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினார். மேற்படி இழந்த பணத்தை மீட்டுக்கொடுத்த சைபர் குற்ற பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.