கோவை : பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் சூப்பிரண்டு திரு .ராஜ பாண்டியன். உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு .ஜெயபிரகாஷ், மற்றும் காவல் துறையினர், காளிபாளையம் பகுதியில், ரோந்து சென்றனர். அப்போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். உடனே காவல் துறையினர், அந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட 525 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை காவல் துறையினர், பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த கார் டிரைவர் யஸ்வந்த் (22), ஆட்டோ டிரைவர் நிஷாந்த் (24), என்பதும், மைசூரில் இருந்து தடை செய்யப்பட்ட புகையி லை பொருட்களை கடத்தி வந்து தமிழகத்தில், விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர், கைது செய்தனர்.