குமரி: கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலர் வேட்டை நாய்கள் கொண்டு முயல்களை வேட்டையாடுவதாக வனச்சரக அலுவலர் திலீபனுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதனைதொடர்ந்து வனச்சரக அலுவலர் திரு.திலீபன் தலைமையில் வனவர் திரு.மணிகண்டன், வனக்காப்பாளர்கள் திரு.முத்துராமலிங்கம், திரு.சரவணன் ஆகியோர் காவல்கிணறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கன்னியாகுமரி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகப்படும் வகையில் ஒரு பெண் உள்பட 4 போ் 2 வேட்டை நாய்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வன அதிகாரிகள் சோதனையிட்டபோது கைப்பையில் 2 முயல்கள் இறந்த நிலையில் வேட்டையாடப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டம் அழகிய நம்பிபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி மனைவி ரோகிணி( 33), அவரது உறவினர் இன்பகுமார் 22 மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என 4 பேரும் சேர்ந்து வேட்டை நாய்களை ஏவி முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனைதொடர்ந்து ரோகிணி உள்பட 4 பேருக்கும் தலா .5 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் .20 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.