திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருங்காவூரை சேர்ந்தவர் ராமதாஸ். வருவாய்த் துறையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்த ராமதாஸ் அண்மையில் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற ராமதாஸுக்கு கிடைக்கப்பட வேண்டிய பண பலன்கள் குறித்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அணுகியிருந்தார். பண பலன்கள் துறையை கவனிக்கும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள கணக்கு பிரிவு அலுவலர் ஷேக் முகமது சான்று வழங்க ராமதாசிடம் 3000ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் 3000ரூபாய் ரசாயனம் தடவிய நோட்டுக்களை ராமதாஸ் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ஷேக் முகமதுவிடம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஷேக் முகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். ஓய்வு பெற்ற கிராம உதவியாளரிடம் லஞ்சம் வாங்கிய வருவாய் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு