திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன் அவர்கள் முன்னிலையில் 23.12.2022- ம் தேதி இன்று முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உதவி எண் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் தேசிய அளவிலான முதியோர் உதவி எண் 14567 பற்றியும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சட்டம் 2007 பற்றியும், முதியோர் உதவி எண் மூலமாக வழங்கப்படும் சேவைகளான தகவல் தொடர்பு, வழிகாட்டுதல், மனநல ஆலோசனை, களத்தலையீடு போன்றவை பற்றியும் மாநில கள பொறுப்பு தலைமை திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு அறிவுரை வழங்கினார்.
அப்போது அவருடைய கள பொறுப்பு அலுவலர்கள் திரு. கார்த்திகேயன், திருமதி. அமுதா, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் திருமதி. ராணி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர்கள், அனைத்து நிலையங்களிலுள்ள நிலைய எழுத்தர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் மூலமாக பெற்றோரின் அடிப்படை தேவைகளை பராமரிக்கவில்லை எனில் பெற்றோர் எழுதிக் கொடுக்கும் சொத்தை ரத்து செய்வதற்கு அவர்களுக்கு வழிவகை உள்ளது என்றும், மூத்த குடிமக்கள் குறித்த மனுக்கள் காவல் நிலையத்திற்கு வரும்போது முன்னுரிமை கொடுத்து விசாரணையை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.