திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அண்மைக்காலமாக வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்களைப் பிடிப்பதாக புகார் எழுந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரி, பூம்புகார், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இங்கு மீன்பிடிக்க வந்தபோது பழவேற்காடு மீனவர்களுக்கும் பிற மாவட்ட மீனவர்களுக்கும் பிரச்சனை இருந்து வந்தது. கடந்த மாதம் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு விசைப்படகில் மீன்பிடித்த 41 மீனவர்களை பழவேற்காடு மீனவர்கள் சிறை பிடித்து அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அவர்கள் இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் இன்று மீண்டும் விசைப்படகு ஒன்று தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் 50க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற பழவேற்காடு மீனவர்கள் அந்த விசைப்படகை சுற்றி வளைத்து அவர்களை தட்டி கேட்டுள்ளனர். தங்களது எல்லையில் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதால் பழவேற்காடு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி கேள்வி எழுப்பிய போது வெளி மாவட்ட மீனவர்களுக்கும் பழவேற்காடு மீனவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் பழவேற்காடு மீனவர்கள் லோகேஷ், பிரதாப் ஆகிய 2மீனவர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்த இரண்டு மீனவர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெளி மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதையும் அதை தட்டி கேட்ட இரண்டு மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பழவேற்காட்டில் கடைகளை அடைத்து தற்போது மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் பைபர் படகுகளில் சென்று ஒரு மாதம் பிடிக்கக் கூடிய மீன்களை விசைப்படகுகளில் வரும் பிற மாவட்ட மீனவர்கள் ஒரே நாளில் பிடித்து சென்று விடுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக பழவேற்காடு மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். வெளி மாவட்ட மீனவர்கள் தங்களது எல்லையில் மீன்பிடிப்பதால் எழும் பிரச்சனை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததாலேயே இன்று பழவேற்காடு மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழவேற்காட்டில் வெளி மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் வந்து மீன் பிடிக்கும் பிரச்சனைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்து அகதிகளாக வெளியே செல்ல வேண்டிய நிலை தான் ஏற்படும் என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து பழவேற்காட்டில் மீனவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு