தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைகுளம் அருகே பட்டினமருதூர் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கியூ பிரிவு ஆய்வாளர் திரு.விஜய அனிதா, உதவி ஆய்வாளர்கள் திரு.வேலாயுதம், திரு.ஜீவமணி, திரு.வில்லியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, கடற்கரையில் நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனையிட்டனர். அதில் 85 மூடைகளில் மொத்தம் 2.5 டன் மஞ்சள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும். இதனை சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு மர்ம நபர்கள் கடத்த இருப்பது தெரியவந்தது.
ஆனால் போலீசாரைக் கண்டதும் அனைவரும் மற்றொரு படகில் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மஞ்சள் மற்றும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகு, லாரி மற்றும் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய 5 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.