கரூர்: மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது 2 லட்சம் கன அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளான வேலாயுதம்பாளையம் காவல் நிலைய சரகத்தில் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதிகளில் வெள்ள பாதிப்பு மீட்பு குழுவினருடன் (SDRF பயிற்சி பெற்ற 120 காவலர்கள்) மூலம் மேற்கண்ட பகுதிகளில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி ஊரக உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் Drone மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மக்களின் அச்சத்தை போக்கவும், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாங்கல் காவல் நிலைய சரகத்தில் திருமுக்கூடலூர், நன்னியூர், நெரூர் சதாசிவன் கோவில் ஆகிய பகுதிகளில் கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரும், மாயனூர், லாலாபேட்டை, குளித்தலை காவல் நிலைய சரகங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் கரையோரம் உள்ள விவசாய இடங்களில் உள்ள பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரும் மீட்பு குழுவினர் (SDRF பயிற்சி பெற்ற காவலர்கள்) மூலம் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 120 காவலர்கள் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் கரூர் நகர உட்கோட்டம் கரூர் ஊரக உட்கோட்டம் மற்றும் குளித்தலை உட்கோட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் துரிதமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.