திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் கோலம்மாள், அவரது மகன் முருகன். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். மாலை கோலம்மாள் வீட்டில் இரவு திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர். இதனை எடுத்து அக்கம்பக்கத்தினர் தங்களது வீடுகளில் இருந்து வாலியில் தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய குடிசை வீடுகள் என்பதால் தீ மளமளவென அருகில் இருந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவரது குடிசை வீட்டிற்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தி சுமார் 1 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், பீரோவில் இருந்த ஆடைகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் என சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் கொழுந்துவிட்டு தீ எரிந்ததால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு