திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி (31). குடும்ப தலைவியாக இருந்து வந்தார். இன்று காலை வேலைக்கு செல்லும் தமது கணவர் குளிப்பதற்காக தண்ணீரை சுட வைக்க பாத்திரத்தில் வாட்டர் ஹீட்டரை வைத்து பட்டனை அழுத்திய போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயங்கினார். இவரது அலறல் சத்தம் கேட்ட கணவர் கார்த்திக் தமது மனைவி அஸ்வினியை அருகில் உள்ள மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த மீஞ்சூர் காவல்துறையினர் அஸ்வினி சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவருக்காக தண்ணீரை சுட வைக்க முயன்ற இளம்பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு