திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை இன்று இடித்து அகற்றப்பட்டு தற்போது இரயில் எஸ்டேட் அமைக்கப்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் அலுவலகம் அமைப்பதற்காக அரேபியன் டென்ட் அமைக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். (அரேபியன் டென்ட்) தற்காலிக கூடாரத்தை ஒன்று சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் அதனை தூக்கி சென்றனர். மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியை கவனிக்காமல் தொழிலாளர்கள் தற்காலிக கூடாரத்தை மேலே தூக்கிய போது, மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது அதனை தூக்கி சென்ற தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து அனைவரும் தூக்கி விடப்பட்டனர். ஒருவர் பலத்த தீக்காயமடைந்தார்.
உடனடியாக அவர்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஒரு தொழிலாளி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். எஞ்சிய 6 தொழிலாளர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். கை, தோல் பட்டை உள்ளிட்ட இடங்களில் லேசான தீக்காயம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 6 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் மோமின் இசுலாம் (30). சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு