திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த ஜமீலாபாத் கிராமத்தில் வசிப்பவர் யூனிஸ். இவர் எருமை மாடுகள் வளர்த்து அதன் மூலம் பால் வியாபாரம் செய்து வாழ்வாதாரம் தேடி வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் பழவேற்காடு காட்டு பகுதியில் மாடுகள் மேய்வதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில் கடப்பாக்கம் அருகே உள்ள அபிராமபுரம் பகுதியில் மாடுகள் மேய்ச்சலில் இருந்த போது நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அபிராமபுரம் பகுதியில் இருந்து பழவேற்காடு பக்கிங்காம் கால்வாய் பகுதியில் உள்ள இறால் பண்ணைகளுக்கு செல்லக்கூடிய மின்சாரம் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதனை அறியாத எருமை மாடுகள் மற்றும் பறவைகள் காட்டு விலங்குகள் அதனை மிதித்து மின்சாரம் தாக்கி சிதறி ஓடி உள்ளன.
இதில் யூனுசுக்கு சொந்தமான நான்கு எருமை மாடுகளும் ஒரு காட்டுப் பன்றியும் காகங்களும் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. இது குறித்து காட்டூர் வருவாய் துறை அலுவலர்களுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் மாடுகளின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். பின்பு இது குறித்து மின்சார துறைக்கு தகவல் தெரிவித்து மின் ஒயர்களை உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தினர். பழவேற்காடு சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் பழைய மின்கம்பங்கள் பழைய மின் கம்பிகள் அவ்வப்போது அறுந்து விழுந்து இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் சூழலில் மாடுகளை கொண்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு