மதுரை: உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில்மின் பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . உரிய நிவாரணம் கிடைக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் காளப்பன்பட்டியைச் சேர்ந்த சுபாகரன்.இன்று உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியில் மின் பழுதை சரி செய்ய அங்கிருந்த இரும்பு மின் கம்பத்தில் ஏறியுள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மின் கம்பத்திலேயே தொங்கியபடி உயிரிழந்தஇந்த மின் வாரிய ஊழியரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மின்வாரிய ஊழியர் உடலை உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இறப்பிற்கு நீதி கோரியும், மின் வாரிய ஊழியருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், தற்காலிக ஊழியர் என்பதால், மின்சாரத்துறை அலுவலர்கள் அலச்சிய போக்குடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி இறந்த ஊழியரின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்
குமார், மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால், உசிலம்பட்டி பேரையூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி