திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., அறிவுறுத்தலின் பேரில், காவல்துறையினரால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் மூலம், இணைய வழி குற்றங்கள், ஜாதி சார்ந்த பிரச்சனைகளின் தீவிரம் மற்றும் அதன் சமூகப் பின்விளைவுகள் குறித்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சட்ட ஒழுங்கை பாதிக்கக்கூடிய பதிவுகள் மீது மாவட்ட காவல்துறையின் சமூக ஊடக பிரிவு தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
2025 ஆம் ஆண்டு இதுவரை 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை உருவாக்கும் மற்றும் பரப்பும் நபர்கள்மீது நடவடிக்கைகள் மிகக் கடுமையாக, எந்தவித சமரசமும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் என்பதை காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, சமூக ஒற்றுமை மற்றும் பொது அமைதியை நிலைநிறுத்தும் நோக்குடன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்