திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உட்கோட்டம், முன்னாள் உதவி காவல் கண்காணிப்பாளர், பல்வீர் சிங் வழக்கில் பாதிக்கப்பட்ட தலித் மைனர் இளைஞர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் போலீசார் என்று வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். (05.09.2024) மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் வி கே புரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் நடத்திவரும் கடைக்கு அதே ஊரைச் சேர்ந்த இளஞ்சிறார் இருவர் மற்றும் ஒரு நபர் குடிபோதையில் சென்று முத்துப் பாண்டியனிடம் சிகரெட் கேட்டுள்ளனர். மேற்படி நபர்களது நண்பர்கள் ஏற்கனவே அவரது கடையில் திருடி உள்ளதால் அவர் சிகரெட் கொடுக்க மறுத்துள்ளார். உடனே மூவரும் அவரை அவதூறாக பேசி கைகளாலும், பாட்டிலாலும் தாக்கியதில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.
அவரது மனைவியும் கீழே தள்ளிவிட்டு இரண்டு பாட்டில்களையும் உடைத்து உள்ளனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்ததில் வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்றாவது நபர் சந்தோஷ் என்பவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரிக்கப்பட்டது. விசாரணையில் அவர் சம்பவத்தில் ஈடுபடவில்லை என தெரிய வந்ததால் விடுவிக்கப்பட்டார். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட இளஞ்சிரார்களை கையகப்படுத்தி விசாரித்த பொழுது மூன்றாவது நபர் ராஜா என்ற நபர் என தெரிய வந்தது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தை மறைத்து பொய்யான செய்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இத்தகை பொய்யான செய்தி பதிவிடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது மாவட்ட காவல்துறை மூலமாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்