மதுரை : டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிகளுக்கும் 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய நிர்வாக இயக்குனர் லெனின் தமிழ்க்கோவன் பரிசுகளை வழங்கினார். உடன், மாநில ஒருங்கினைப்பாளர் சிதம்பரம், கல்லூரி முதல்வர் பழனிநாதராஜா, கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், மற்றும் தேவேந்திரகுமார் திவாரி உள்ளிட்டோர் இருந்தனர். புது டெல்லி அறிவியல் தொழில் நுப்பத்துறை , குஜராத்தின் தேசிய புதிய கண்டுபிடிப்பு மையம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து மாநில அளவில் கண்காட்சி மற்றும் 2022-23 ம் ஆண்டிற்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. உலகம் முழுவதும் தமிழகம் முழுவதும் இருந்து 64 பள்ளிகள் பங்கு பெற்ற போட்டியில் சென்னை, திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 64 மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
இதில், சென்னை எஸ்.கே.பி.டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் புலகல திரிநாத்தின் தானியங்கி இரயில் படுக்கை கண்டுபிடிப்பு முதல் பரிசு பெற்றது. இதில், 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் 4 அரசுப் பள்ளி மாணவிகள் தேர்வு பெற்று சாதனை படைத்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவி சஜிதாவின் குறைந்த செலவில் தானிய சுத்தம் செய்யும் இயந்திரம் 3-வது பரிசையும், கரூர் மாவட்டம் ஜெகதாபி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷாவின் மின் காந்த ஆற்றல் மூலம் செயல்படும் தறி இயந்திரம் 6வது பரிசை பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் ஹரி பிரசாத் சமையல் எரிவாயு எந்திரத்தில் சக்கரங்களுடன் இணைத்த கைப்பிடி சாதனம் ஏழாவது பரிசை பெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சுபர்ணாவின் பறவைகளை விரட்டும் கவண் கண்டுபிடிப்பு 8-வது பரிசு பெற்றது. பரிசு பெற்ற மாணவ மாணவிகள் ஆகஸ்டு மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அறிவியல் புத்தாக்க கண்காட்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி