மதுரை : மதுரை மாவட்ட காவல் துறை, மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் மாநிலத்திலேயே முன்னிலையில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மக்களிடம் ஏற்பட்ட நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், தொலைந்துபோன மொபைல் சாதனங்களைத் துரிதமாக மீட்கும் நடவடிக்கைகளில் மதுரை மாவட்ட காவல் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. இந்த சிறப்பிற்குக் காரணமானது CEIR – Central Equipment Identity Register (மத்திய சாதன அடையாளப் பதிவேடு) ஆகும். CEIR என்பது தொலைபேசி திருட்டு அல்லது தொலைந்துபோன மொபைல் சாதனங்களை அடையாளம் காணவும், அவற்றின் சேவைகளை முடக்கவும் பயன்படும் மத்திய தரவுத்தள அமைப்பு ஆகும். இது இந்திய அரசின் தொலைதொடர்பு துறை (Department of Telecommunications – DoT) ஆல் தொடங்கப்பட்ட ஒரு தேசிய முயற்சி ஆகும்.
இந்த CEIR தளம் IMEI (International Mobile Equipment Identity) எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் மூலம் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் சாதனங்களை உடனடியாக முடக்கலாம், சாதனம் மீண்டும் கிடைத்தால் சேவையை மீண்டும் செயல்படுத்தலாம், போலியான IMEI எண்களைக் கொண்ட சாதனங்களை அடையாளம் காணலாம். தமிழகத்தில், இந்த CEIR தளத்தின் மூலம், பொதுமக்களின் புகார்களை விரைவாகப் பதிவு செய்து, தொலைந்த மொபைல் சாதனங்களை மீட்டுத் தருவதில் மாநிலத்தில் மாவட்டம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மதுரை மாவட்டம் முதல் இடத்தையும், மாநிலத்தில் காவல் நிலையம் வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் உசிலம்பட்டி காவல் நிலையம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. இதற்காக, இந்திய அரசின் தொலை தொடர்பு துறை (DoT) சார்பில் வழங்கப்படும் DOT-CEIR சிறந்த செயல்பாட்டுக்கான இந்த விருதை கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP Cyber Crime) டாக்டர்.சந்தீப் மித்தல், இ.கா.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார்.
இந்த அங்கீகாரம், மதுரை மாவட்ட காவல் துறை தனது தொழில்நுட்ப நுண்ணறிவு, மக்களுடன் கொண்டுள்ள நெருக்கம், மற்றும் துரிதமான காவல் நடவடிக்கைகளுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இது போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை மேலும் வலுப்படுத்தி, மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவைகள் தொடர்நது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















