மதுரை: மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், வசிக்கும் ஓய்வு பெற்ற மத்திய சுங்கத்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், மதுரை மீனாம்பாள்புரத்தில் வசிக்கும் சிங்கராஜ் என்பவரிடம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது குடும்ப அவசர தேவைக்காக 25 லட்ச ரூபாய் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். மாதம் 25 ஆயிரம் ரூபாய் வட்டி எனவும், 10 மாதத்தில் வட்டி அசலையும் செலுத்தி விட வேண்டும் என்கிற ஒப்பந்தத்தில், வட்டிக்கு பணம் பெற்றார். ராஜேந்திரன், மேலும் பணத்திற்கு ஈடாக தனக்கு சொந்தமான ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை சிங்கராஜ் பெயருக்கு கிரையமாக எழுதிக் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பி தரும்போது, ஈடாக பதிவு செய்யப்பட்ட வீட்டை திருப்பித் தருவதாக சிங்கராஜ் கூறியதை நம்பி, ராஜேந்திரன் தனது வீட்டை சிங்கராஜுக்கு கிரையம் செய்து கொடுத்தார்.
தற்போது, 10 மாதங்கள் முடிவுற்ற நிலையில், ராஜேந்திரன் வட்டி மற்றும் அசல் தொகையினை செலுத்தவில்லை, இதனையடுத்து சிங்கராஜ் ராஜேந்திரனை பணத்திற்கு ஈடாக வீட்டை எடுத்துக்கொண்டு விட்டதாகவும், வீட்டை காலி செய்து விட்டு செல்லுமாறு கூறியதாகவும், இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சி செய்ததாகவும், ஆகவே, வீட்டை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்ட சிங்கராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வீட்டை மீட்டுத்தர வேண்டுமென, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ராஜேந்திரன் கோரிக்கை மனு அளித்தார். முன்னதாக, மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இணைய வழியாக கோரிக்கை மனு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் சேக் முகமது உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி