கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே (17). வயது மாணவி ஒருவர் Free Fire எனும் ஆன்லைன் விளையாட்டின் மூலம் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அறிமுகமாகி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞர், மாணவியுடன் வீடியோ கால் மூலம் ஆபாசமாக பேசியதுடன், அந்த காட்சிகளை ரகசியமாக பதிவு செய்ததாகவும், பின்னர் அந்த பதிவுகளை பயன்படுத்தி மாணவியை மிரட்டி தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மிரட்டலால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 09/2026 U/S 11(ii), (iv), (v), 12, 13(a),(b),(c), 14, 15(1),(2),(3) of POCSO Act & 67, 67A, 66B of IT Act ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளியை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவின் படி மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு நல்லசிவம் அவர்கள் மேற்பார்வையில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் சிறப்பு குழு உத்திரபிரதேச மாநிலத்திற்கு சென்று தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது.அந்த நடவடிக்கையின் போது, குற்றத்தில் தொடர்புடைய இளைஞர் ஆக்ரா பகுதியை சேர்ந்த உதய நாராயணன் என்பவரின் மகன் அஜய் (21) என கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட குற்றவாளியை காவல்துறையினர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இணையவழி விளையாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
















