கன்னியாகுமரி: கடந்த 2017 ஆம் ஆண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை செய்து வந்த தென்காசியைச் சேர்ந்த வேலு என்பவரின் மகன் சிவா @ சிவகுமார் (38). அதே விடுதியில் தங்கி ஆறாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவனை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, நேசமணி நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 462/2017 ஆக, POCSO சட்டம் பிரிவுகள் 10, 9(m), 9(p) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடிவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளி சிவா @ சிவகுமாருக்கு 05 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில், புலன் விசாரணை, சாட்சிகள் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர காரணமாக இருந்த புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், மேலும் வழக்கை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
















