காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் 36-வது மாநில இளையோர் தடகள போட்டி கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த தடகள போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அந்த வகையில் வட்டெறிதலில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காஞ்சீபுரம் சங்கரா பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படிக்கும் மாணவர் மகேஸ்வர் 47.30 மீட்டர் தூரம் வட்டெறிதல் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவர் மகேஸ்வருக்கு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சான்றிதழும் பதக்கமும் வழங்கினார். மேலும் இந்த மாநில அளவிலான போட்டியில் முதலிடத்தை கைப்பற்றி தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம் மாணவர் மகேஸ்வர் அடுத்த மாதம் அசாமில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியிலும் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்