புதுக்கோட்டை : புதுக்கோட்டை பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் லோகப்பிரியா (வயது 20).இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். பழனியப்பன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சிவகாமி வேலைக்கு சென்ற நிலையில் லோகப்பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்
இந்த நிலையில் நேற்று சிவகாமி வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் லோகப்பிரியா முகத்தில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு மற்றும் கணேஷ் நகர் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர் வீட்டின் உள்ளே சென்று லோகப்பிரியாவை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நாய் சிறிது தூரம் சென்று மீண்டும் வீட்டிற்குள் வந்து பின் பிரதான சாலைக்கு சென்றது. தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர் மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்தும் விசாரிக்கின்றனர்.