தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றுபவர் ராதா ( 56). இவர் கே ஆர் நகரில் குடியிருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் தவமணி ( 47 ) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த தவமணியை வீட்டை காலி செய்யச் சொல்லி டாக்டர் ராதா கூறியிருந்தார். ஆனால் தவமணி வீட்டை காலி செய்ய மறுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளன்று மருத்துவமனையில் இருந்து வரும்போது தவமணி ராதாவை வழிமறித்து நீதானே வீட்டைக் காலி செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாய் என்று தகராறு செய்து கையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசினாராம். இதுபற்றி டாக்டர் ராதா தேனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் தேனி போலீசார் தவமணியை கைது செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்