தூத்துக்குடி: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ஆம் தேதி மனித கடத்தலுக்கு எதிரான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித கடத்தல் தடுப்பு குறித்து விளக்க உரையாற்றினார்.
அப்பொழுது அவர் கூறுகையில், “மனித கடத்தலில் அதிகமான பாதிப்புகளை சந்திப்பவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் தான். தேசியக் குற்ற ஆவணத்தின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 2465 வழக்குகள் மனித கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலமாக 5 ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தண்டனை சட்டத்தின்படி மனித கடத்தல் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். பொதுவாக மனித கடத்தல் என்பது சட்டவிரோதமாக பணியமர்த்தல், இடம் மாற செய்தல், பாலியல் தொழில், உடல் உறுப்பு திருட்டு மற்றும் உழைப்புச் சுரண்டல் போன்ற காரணங்களுக்காக நடக்கிறது.
ஆகவே மனித கடத்தல் தொடர்பாக யாருக்கு எந்த தகவல் கிடைத்தாலும் உடனடியாக மனித கடத்தல் உதவி தொலைபேசி எண்ணான 1098-க்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
இதன் மூலமாக அவர்கள் காப்பாற்றப்படுவார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மனித கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக இருந்தாலும் அவற்றிற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குழந்தைகள் உதவி மையத்தின் மூலமாக தீர்வு காண முடியும். எனவே அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.