திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (10.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் தலைமையில் “மனித உரிமைகள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.