திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்ட பகுதிகளில் லாரிகளில் அதிக எடையுள்ள குண்டு கற்களை ஏற்றி சென்று பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், சாலைகள் சேதமடைவதாகவும், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்களின் கவனத்திற்கு வந்ததால்.
மேற்படி அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டதன் பேரில், இதுவரை அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் மட்டும் விதித்து வந்த நிலையில், இன்று திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் கலந்தபனை அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற 8 லாரிகளை பணகுடி காவல்துறையினர் பறிமுதல் செய்து ஓட்டுனர்களை கைது செய்தும்,
உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை நீதிமன்றத்திற்கு அனுப்பியும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள் கூறுகையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதும், உரிய ஆவணங்கள் இன்றி கனிமவள கடத்தலில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.