திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மேற்கு தாலுகாவின் வட்டாட்சியராக கடந்த பிப்ரவரி மாதம் வில்சன் தேவதாஸ் பணியேற்றார் பணி பொறுப்பை ஏற்றவுடன் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை மாவட்டத்திலேயே அதிசிறப்பாக நடத்தி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்றார். மே மாதம் சீலபாடி கிராமம் நந்தவனப் பட்டியில் 7 ஆண்டுகளாக பூட்டி இருந்த ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலை அனைத்து தரப்பு மக்களையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி கோவிலை திறந்து வைத்தார்.
இப்போது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்று வருகிறது. அதேபோல் இன்று திண்டுக்கல் மேற்கு வட்டம் அகரம் கிராமம் உலகம்பட்டியில் சுமார் 9 ஆண்டுகளாக சட்ட ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த காளியம்மன் கோவிலை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி மேற்கு வட்டாட்சியர் வில்சன் தேவதாஸ் வருவாய் ஆய்வாளர் அறிவழகன் கிராம நிர்வாக அலுவலர் அருண், லோகநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்பு திறந்து வைத்தார். அதேபோல தாடிக்கொம்பு கிராமம் அய்யம்பாளையத்தில் ஏழு ஆண்டுகளாக சட்ட ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த பெருமாள் கோவில் வீடானது திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவின் படி திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஊர் பொதுமக்கள் முன்பு திறந்து வைத்தார்.
பதவியேற்ற ஐந்து மாதத்திற்குள் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி இருந்த மூன்று கோயில்களை திறந்து வைத்த வட்டாட்சியர் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் மத நல்லிணக்கத்திற்கு வழி செய்யும் வகையில் நடந்து கொண்டது மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதன் காரணமாக இவரை மத நல்லிணக்க காவலர் என புகழாரம் சூட்டினர். மேலும் இவரைப் போலவே அனைத்து அரசு அலுவலர்களும் இருந்தால் திண்டுக்கல் மாவட்டமே முதன்மையானதாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.