கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், மான் கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மொட்டையன் மகன் தங்கராஜ்(38). என்பவர் அவரது வீட்டின் பின்புறமும், கடந்த (12.07.2024)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் வேலு @ கொட்டகட்டி வேலு(50). என்பவர் கல்லாநத்தம் கிராமம் அருகிலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கரியாலூர் மற்றும் சின்ன சேலம் காவல் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. விசாரணைக்கு பின் குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் நிலையங்களில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் தொடர்ந்து இது போன்ற மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப., அவர்கள் மேற்படி இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி (30.08.2024)-ஆம் தேதி கடலூர் மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை சார்வு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.