மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் தமிழக காவல்துறையின் சட்டம் & ஒழுங்கு கூடுதல் இயக்குநர் முனைவர் மகேஷ்வர் தயாள், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறை துணைத் தலைவர், மதுரை சரகம், திரு. அபினவ் குமார், இ.கா.ப., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K. அரவிந்த், இ.கா.ப., விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. கண்ணன், இ.கா.ப., பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி சத்திரிய கவின், இ.கா.ப., மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பண்டிகை கால பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை கூடுதல் இயக்குனர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
















