மதுரை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அமைதியான மற்றும் சீரான முறையில் நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (16.03.2026) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான திரு. கே.ஜே. பிரவின்குமார் இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தேர்தல் சட்டங்களை மீறாமல், அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு), தேர்தல் அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















