மதுரை, மே 4, 2025: மதுரா கோட்ஸ் பாலம் அருகே இன்று அதிகாலை 1.45 மணியளவில் நடந்த HIT & RUN விபத்தில் மூன்று தசாப்தங்களாக காவல் துறையில் விடாமுயற்சி மற்றும் நேர்மையுடன் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தது காவல் துறையிலும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிலும் ஆழ்ந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் ராஜு (54/25), தந்தை பெயர் சுப்பையா, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் 9-வது தளத்தில் வசித்து வந்தார். 1997 ஆம் ஆண்டு காவல் துறையில் இணைந்த இவர், தனது கடமையில் நெடுநாள் அனுபவம் பெற்றவர். தற்போதைய நிலைக்கு வருவதற்குள் பல்வேறு நிலைகளில் சேவை புரிந்து, தற்போது சென்னை சிட்டி AR MT பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக (HC 63601) பணியாற்றி வந்தார்.
அவரது நேர்மை, பொறுப்பு உணர்வு, மற்றும் பணியின் மீதான பற்றுதலால், ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி திரு A.K. விஸ்வநாதன் IPS அவர்களின் நம்பிக்கையாளர் ஆகி, அவருக்கு தனிப்பட்ட டிரைவராகவும் பணியாற்றியவர். இது அவரது பணித்திறமைக்கும் நம்பிக்கைக்கும் ஒரு பெரிய சான்றாக அமைந்தது.
ராஜு, தனது குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயல்புடையவர். தனது உடன்பிறந்த தங்கை லட்சுமியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரை வந்திருந்தார். மதுரை ரயில் நிலையத்திலிருந்து, அழகரடி 4-வது தெருவில் உள்ள தனது மைத்துனர் திரு. பாஸ்கரின் வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில், மதுரா கோட்ஸ் பாலம் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
மரணத்திற்கு பின்புற தலையில் ஏற்பட்ட தீவிர ரத்தக் காயமே காரணமாக இருந்தது என்று மருத்துவத் தரப்பும் தெரிவித்துள்ளது. இதனைக் கண்டதும் விபத்து ஏற்படுத்திய வண்டி ஓட்டுனர் தப்பி ஓடியதாகவும், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மூன்று தசாப்தங்களாக காவல் துறையை தன்னலம் பாராமல் சேவைத்துறையாக பார்த்தவர், அவரது நேர்மை மற்றும் பணித்திறமையின் மூலம் துறையின் மனப்பான்மையை உயர்த்தியவர், சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜு அவர்கள் இழப்பை ஈடு செய்ய முடியாததாக அவரது சக ஊழியர்களும், உயரதிகாரிகளும் ஆழ்ந்த துக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக

செங்கல்பட்டு மறைமலைநகரை சேர்ந்த
நமது குடியுரிமை நிருபர்
திரு.ரமேஷ்.