திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவை சேர்ந்த பால் இசக்கி (49). கடந்த பிப்ரவரி மாதம் தனது 14 வயதான மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பால் இசக்கியை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் குற்றவாளியான பால் இசக்கிக்கு தூக்கு தண்டனை மற்றும் ரூ 25,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்ததுடன்
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்க உத்தரவிட்டது.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம்,(CWC) நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி, தர்ஷிகா நடராஜன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மங்கையர்கரசி (தற்போது சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையம்) மற்றும் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆளிநர்களையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், 2025-ம் வருடத்தில் மட்டும், இதுவரை 28 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 29 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமாக சட்ட நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















