சென்னை: சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசித்து வந்த வனஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), (வ/36), என்பவரின் கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில் வனஜா, தமீம் அன்சாரி என்பவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 05.04.2022 அன்று இரவு மேற்படி தமீம் அன்சாரி என்பவர் வனஜாவின் 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தாயார் வனஜா செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியிடம் விசாரணை செய்தபோது, தமீம் அன்சாரி என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், மேலும் ராஜேஸ் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதால் சிறுமி கர்ப்பமானதும், மேற்படி கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் சிறுமியின் தாயார் கலைத்துள்ளதும் தெரியவந்தது.
அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தமீம் அன்சாரி (வ/32) மற்றும் சிறுமியின் கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் கலைத்து, குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.