மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது மனைவி சுமதி. இவர் கிழக்கு தெருவில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் உரிமையாளர் சுமதி தனது வீட்டின் வாசலில் கார்த்திகை தீபம் ஏற்றிவிட்டு வீட்டிற்குள் சென்றிருந்த நிலையில் திடீரென ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீட்டின் மேல் சரமாரியாக வீசியது. சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த சுமதி செய்வதறியாது திகைத்து வெளியே ஓடி வந்தார். அப்போது வீட்டின் வெளி படிக்கட்டுகளில் மாடியில் ஜன்னல்களில் தீப்பற்றி மள மள என எரிந்தது உடனேஅக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர், அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இதில், சுமதியின் மகனான சூர்யா என்பவர் கொலை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு முன்பாக வெளியே வந்துள்ளார். இந்நிலையில், அவரை கொலை செய்யும் நோக்கில் மர்ம கும்பல் வந்ததா என்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் ,பெட்ரோல் குண்டு வீசியசம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி