சென்னை: பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், போலீசாரின் தடையை மீறி பாஜகவின் தமிழக தலைவர் வேல்முருகன் திறந்த வேனில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கோயம்பேட்டில் இருந்து யாத்திடை தொடங்கியதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோயம்பேடு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி வழியாக வந்த வெற்றிவேல் யாத்திரை, பூந்தமல்லி – திருமழிசை கூட்டு சாலையில் திரும்பும்போது கைது செய்வதற்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இரும்பு தடுப்புகள் அமைத்து இருந்தனர். பாஜகவினர் அந்த தடுப்புகளை மீறி வெற்றிவேல் கோஷமிட்டபடி அங்கிருந்து சென்றனர்.
இதில் வெற்றிவேல் யாத்திரைக்கு பாஜக தலைவர் முருகனோடு சேர்த்து 10 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதனை பின்தொடர்ந்து வந்த பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பாஜகவின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த 1010 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் முக்கிய சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.