மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவரது கடைக்கு கடந்த மாதம் வந்த ஒருவர் அருகே உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளதாகவும் தற்போது குடும்ப கஷ்டம் காரணம் என்றுக்கூறி வளையல்கள், செயின் உள்ளிட்டவற்றை ரூபாய் 2.80 இலட்சத்திற்கு அடகு வைத்துள்ளார்,
இதேபோன்று சில தினங்களில் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளில் அதேபோன்று வளையல் உள்ளிட்ட பொருட்களை அதே நபர் அடகு வைத்து ரூபாய் 20 இலட்சத்திற்கும் மேலாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, பாலசுப்பிரமணியம் தன்னிடம் அந்த நபர் அடகு வைத்த நகையை சோதனை செய்தப்போது அது தங்கமுலாம் பூசப்பட்ட போலியான நகை என தெரியவந்துள்ளது,
இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற அடகுக்கடைக்காரர்களும் நகைகளை சோதனை செய்தப்போது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்துள்ளது,
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நகை அடகுக்கடைக்காரர்கள் இதுதொடர்பாக மேலூர் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, அடகுக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு மோசடி நபரை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலக்கிருஷ்ணன், காவலர்கள் பிரபாகர், வடிவேல், அய்யாச்சாமி, துரைப்பாண்டி, உள்ளிட்ட காவல்த்துறையினர் செக்கடி பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சிவகங்கையில் இருந்து மேலூர் நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தப் போது, அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார், இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தப்போது,
அவர் தேவக்கோட்டை தாலுகா சருகுணி அருகே உள்ள பின்னலங்கோட்டையைச் சேர்ந்த கருப்புச்சாமியின் 25 வயதான மகன் சிவசக்தி என்பது தெரியவந்தது, மேலும் இவர் மேலூர் மற்றும் திருவாதவூர் பகுதிகளில் உள்ள அடகுக்கடைகளில் 48 பவுன் போலி நகைகளை அடகு வைத்து ரூபாய் 21 இலட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதும்,
மதுரை, கருப்பாயூரணி, சிவகங்கை, தேவக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள அடகுக்கடைகளில் இதேபோன்று போலி நகைகளை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்ட நிலையில், இதுதொடர்பான புகாரில் தேவக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து ரூபாய் 4 இலட்சம் ரொக்கம், வீட்டுமனை பத்திரங்கள், போலி நகைகள் மற்றும் இருசக்கர பல்சர் வாகனத்தை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.