திருவள்ளூர் : போதை இல்லா தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை மாணவர்கள் மத்தியிலும் தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செங்குன்றம் காவல் உதவி ஆணையர் ராஜா ராபர்ட், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பள்ளி இறை வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்று மாணவர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்த காவல்துறை அதிகாரிகள் போதை பொருட்களை கட்டாயம் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை வாசிக்க மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் பள்ளி வளாகத்தை சுற்றிலும் போதைப் பொருட்களின் விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு மாணவர்கள் தைரியமாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், தகவல் தெரிவிக்கும் மாணவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் காவல்துறையினர் அப்போது தெரிவித்தனர். தொடர்ந்து போதை பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மேலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில்லை தடை செய்யப்பட்ட பகுதி என்ற ஸ்டிக்கர் களையும் கடைகளில் காவல் துறையினர் ஒட்டினர். இதே போல மேலூர் ANM உயர்நிலைப் பள்ளியில் மீஞ்சூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் வேலுமணி தலைமையிலும், அனுப்பம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் மீஞ்சூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலும், அத்திப்பட்டு அரசு உயர்நிலைபள்ளியில் சோழவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜா குமார் தலைமையிலும் பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் மீஞ்சூர் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு